LAUGFS Gas எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த எரிவாயுவைப் பயன்படுத்தும் பல உணவகங்கள் மற்றும் சிறிய ஹோட்டல்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகள் இன்று (07) நள்ளிரவு முதல் உயர்த்தப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் வெளியிட்ட தகவலின்படி, அதிகரித்துள்ள எரிவாயு செலவினால் உணவகங்களை நடத்துவது கடினமாகியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி புதிய விலைகள் பின்வருமாறு அமுல்படுத்தப்படுகின்றன:
- சோறு, பிரியாணி மற்றும் நாசி கோரெங் – 25 ரூபாய் அதிகரிப்பு
- பால் தேநீர் – 10 ரூபாய் அதிகரிப்பு
- சாதாரண தேநீர் – 5 ரூபாய் அதிகரிப்பு
- சிற்றுண்டிகள் (Short Eats) – 5 ரூபாய் அதிகரிப்பு
இதேவேளை, முட்டை ரொட்டி, பராட்டா உள்ளிட்ட சில உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயுவைப் பயன்படுத்தும் சுமார் 25% முதல் 30% வரையான உணவகங்கள் மற்றும் சிறிய உணவுச்சாலைகள், அதிகரித்த செலவினால் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாத நிலையாக மாறியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அன்றாட உணவுகளின் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
