சீரற்ற வானிலை தீவிரம்! – 8 மாவட்டங்களில் அனர்த்தம்: உயிரிழப்பு 2 ஆக உயர்வு.






அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, நாட்டில் நிலவி வரும் கடும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இன்று (15) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாட்டின் 8 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணங்களால் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 104 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், தொடர்ந்து பாதிப்பு மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனத்தில் கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.