சவூதி வான்பரப்பில் நுழைந்த 3 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன



 வான்பரப்புக்குள் நுழைந்த மூன்று ட்ரோன்களை வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

இந்த ட்ரோன்கள் ஈராக் வான்வெளி வழியாக நுழைந்ததாக சவூதி அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் தக்க பதிலடி வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், ஈரான் தொடர்பான மோதல்களில் ஏற்பட்ட பதற்றம் ஓரளவு குறைந்திருந்தது. எனினும், ஈராக் பகுதியிலிருந்து சவூதி அரேபியா மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை இலக்காகக் கொண்டு தொடர்ந்து ட்ரோன் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையம் ஒன்றை குறிவைத்து நேற்று (18) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்தத் தாக்குதலால் கதிரியக்க பாதுகாப்பு அமைப்புகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் UAE பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி வழங்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு முழுமையான உரிமை இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.