புகையிலை பயன்பாட்டால் ஆண்டுதோறும் 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள்.

 


புகையிலை பயன்பாட்டின் காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிய நாடான இலங்கையில் வருடத்திற்கு சுமார் 22,000 பேர் புகையிலை பயன்பாட்டால் அகால மரணமடைவதாக குறிப்பிட்டார். மேலும், புகையிலை காரணமாக ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் மற்றும் சிகிச்சை செலவுகளால் ஆண்டுதோறும் சுமார் 214 பில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த செலவு ஒரு தாமரைக்கோபுரம் கட்டுவதற்குச் சமமானது என்றும், புகையிலை தொடர்பான நோய்களை பராமரிக்க செலவிடப்படும் தொகையால் 16 தாமரைக்கோபுரங்கள் அல்லது இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையில் தினசரி 9 முதல் 11 மில்லியன் வரையிலான சிகரெட் பில்டர்கள் சுற்றுச்சூழலில் கொட்டப்படுவதாகவும், அவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் காணப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.