மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு – தேர்தல் ஆணைக்குழு நிலைப்பாடு.



 பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் தேவையான சட்ட ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் அவற்றை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடிய நடைமுறைகள் குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் விசேட குழுவிற்கு விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தது.

அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய இந்த குழுக் கூட்டத்தில் இவ்விவகாரம் முக்கியமாக ஆராயப்பட்டது.

இதன்போது தேர்தல் ஆணைக்குழு, தேவையான சட்ட ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டால் தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்கள் அருண் ஹேமச்சந்திர, சட்டத்தரணி சுனில் வடகல, முனீர் முலாபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுணஆரச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் இணையவழியாக கலந்துகொண்டிருந்தார்.