கட்டுநாயக்கவில் அதிரடி சோதனை: 3 சீனர்கள் 87 கைபேசிகளுடன் கைது



 சைபர் குற்றங்களை (இணையவழி குற்றங்கள்) மேற்கொள்வதற்காக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 5,140,000 ரூபாய் மதிப்பிலான கைபேசிகள் மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, பசுமை வழித்தடம் (Green Channel) ஊடாக வெளியேற்ற முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 34 வயதுடைய சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு சீன ஆண்களும் அடங்குகின்றனர்.

விசாரணையின் போது, சந்தேகநபர்களில் ஒருவரின் பையை சோதனை செய்தபோது மிட்டாய்கள் மற்றும் சாக்கலேட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைபேசிகள் கண்டறியப்பட்டன.

மேலும் சோதனையில், அவர் அணிந்திருந்த ஆடையின் கீழ் சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூடுதல் கைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, மற்றொரு சந்தேகநபரின் காலணிக்குள் மற்றும் பயணப்பையிலிருந்தும் மொத்தம் 87 கைபேசிகள் மற்றும் 140 மின்கலங்கள் மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மூவரையும் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.