முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த (2) ஆம் திகதி காலை சுமார் 10 மணியளவில் சிறிய படகில் கடலுக்குச் சென்ற இவர்களிருவர், வழக்கமான நேரத்திற்குள் கரைக்கு திரும்பாத நிலையில், அவர்களின் குடும்பத்தினர் கவலைக்கிடமாக தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பிரதேச மீனவர்களும் தங்களால் இயன்ற உதவியை வழங்க முனைந்து, படகுகள் மூலம் கடற்பரப்பில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இன்று மீண்டும் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன மீனவர்களின் பாதுகாப்பு குறித்து உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.
