விளாடிமிர் புடின், உக்ரைனுடனான போர் முடிவை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ள கருத்து உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியம் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
உக்ரைனில் நடைபெற்று வரும் “சிறப்பு இராணுவ நடவடிக்கை” குறித்து கருத்து தெரிவித்த புடின், “இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதாக நான் நினைக்கிறேன். ஆனால் இது மிகவும் தீவிரமான விடயம்” என குறிப்பிட்டார்.
அதேவேளை, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் மேற்கத்திய நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக நேட்டோ அமைப்பு ஆயுத உதவிகள் மூலம் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இந்த ஆண்டின் ரஷ்ய வெற்றி தின அணிவகுப்பில் வழக்கமாக இடம்பெறும் டாங்கிகள் மற்றும் ஏவுகணை காட்சிகள் இடம்பெறாதது பலரது கவனத்தையும் ஈர்த்தது. செஞ்சதுக்கம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பாதுகாப்பு அச்சமே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இருப்பினும், டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த சமரச முயற்சியால், மொஸ்கோ மற்றும் கிவ் இடையே கடைசி நேரத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அணிவகுப்பு எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நிறைவடைந்தது.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன் நடைபெற்ற வெற்றி தின உரையிலும் புடின், ரஷ்யா “நீதியான போர்” ஒன்றை முன்னெடுத்து வருவதாக கூறியதுடன், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் ஆக்கிரமிப்பு சக்தியாக உக்ரைனை விமர்சித்திருந்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கத்திய நாடுகளின் தலையீடு குறித்து கேட்கப்பட்டபோது, “அவர்கள் உதவி செய்வதாக கூறி இந்த மோதலைத் தூண்டிவிட்டனர். அது இன்னும் தொடர்கிறது,” என புடின் பதிலளித்தார்.
