யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும் தீ விபத்து – மருந்து களஞ்சியசாலை முழுவதும் சேதம்!

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல் சுமார் 5 மணி நேர தீயணைப்பு முயற்சிக்குப் பிறகு தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரென தீப்பற்றி பரவத் தொடங்கியதை தொடர்ந்து வைத்தியசாலை ஊழியர்கள் முதற்கட்டமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் யாழ் மாநகர சபை தீயணைப்புப் படையினர், இராணுவம், விமானப்படை, பொலிஸார் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

மருந்து களஞ்சியசாலையில் எளிதில் தீப்பற்றக்கூடிய அமிலங்கள் மற்றும் மருந்துகள் இருப்பதால் தீ மிக வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் களஞ்சிய கட்டடமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

களஞ்சியசாலையில் அண்மையில் நிறுவப்பட்ட குளிரூட்டப்பட்ட அறையில் (Cool Room) ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்டத்தில் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.