கல்கிஸ்ஸில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை – வெளிநாட்டவர் கைது

 


சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ஒன்றை கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முற்றுகையிட்டு, வெளிநாட்டு நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்திடிய வீதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இந்த சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தின் சோதனை பிடியாணையின் கீழ் நேற்று (19) இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழு அதிகாரிகளும் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.

சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட அலைபரப்பு மற்றும் தொடர்பாடல் உபகரணங்களுடன் அந்த நிலையத்தை நடத்தி வந்த வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் களுபோவில பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொடர்பாடல் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.