பறிமுதல் செய்யப்பட்டவற்றில் சுமார் 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தப்பியோடிய நபர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகள் வழியாக சமீபகாலமாக கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், உரம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சீனியப்பா தர்கா கடற்கரையிலிருந்து படகின் மூலம் பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக இந்திய கடலோர காவல் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ‘ஹோவர்கிராப்ட்’ ரோந்து கப்பலின் உதவியுடன் மண்டபம், வேதாளை மற்றும் சீனியப்பா தர்கா கடற்கரைப் பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாகனத்திலிருந்து படகில் பெட்டிகள் ஏற்றப்பட்டதை கண்ட அதிகாரிகள் அவர்களை சுற்றிவளைக்க முயன்றனர். ஆனால், படகில் இருந்த இருவர் கடலுக்குள் தப்பிச் சென்றதுடன், சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளை கடற்கரையில் வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த 12 பெட்டிகளை மீட்ட அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தபோது, ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்த மாத்திரைகள் இலங்கையில் கொக்கைன், ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் போன்ற போதைப்பொருட்களுடன் கலந்து பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இவை அதிகளவில் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் தொடர்பில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
