தேசபந்து தென்னகோனை குறித்த சம்பவத்தின் சந்தேகநபராக பெயரிடுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட சட்டமா அதிபரின் கடிதத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நேற்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏ.எச்.எம்.டி. நவாஸ், அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதியரசர் நவாஸ், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் என கேள்வி எழுப்பிய நிலையில், ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
இதேவேளை, தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது தரப்புக்காரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமானால், இந்த வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பதில் பயன் இல்லை என நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அனைத்து தரப்புகளின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், வழக்கை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
