பதுளை – மொனராகலைக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை! – மக்கள் அவதானமாக இருக்க அறிவுரை

 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




இந்த எச்சரிக்கை இன்று இரவு 9 மணி முதல் நாளை இரவு 9 மணி வரை அமுலில் இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை மற்றும் நிலத்தின் ஈரப்பதம் அதிகரித்துள்ள காரணத்தால், மலைச்சரிவுகள், நிலப் பிளவுகள் மற்றும் மண்சரிவு அபாயங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், நிலத்தில் பிளவுகள், மரங்கள் சாய்வு, திடீர் நீரோட்ட மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.