முதலமைச்சர் விஜய்க்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து – “இது புதிய தலைமுறையின் வெற்றி”

 ச. ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜீவன் தொண்டமான் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.




இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விஜயின் வெற்றி தமிழ்நாட்டு மக்களின் பேராதரவும் மாற்றத்திற்கான வலுவான விருப்பமும் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக மக்களின் நம்பிக்கையை வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்த முக்கிய தருணத்தில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும், இந்திய வம்சாவளி மலையக மக்கள் சார்பிலும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வெற்றி வெறும் அரசியல் சாதனை அல்ல என்றும், அது புதிய தலைமுறையின் எதிர்பார்ப்புகள், ஜனநாயகத்தின் வலிமை மற்றும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் தலைமையில் நீதி, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையுடன் தமிழ்நாடு மேலும் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் என்ற நம்பிக்கையையும் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழக முன்னாள் தலைவர்களுடன் இருந்த நட்புறவுகள் மற்றும் இருநாட்டு தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்புகள், விஜயின் தலைமையிலும் மேலும் வலுப்பெறும் என தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, மக்கள் நலன் மற்றும் மனிதநேய ஆட்சியை முன்னிறுத்தி விஜயின் நிர்வாகம் தமிழ்நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.