அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை இந்த ஆண்டின் இறுதி வரை சுமார் 80 டொலர் மட்டத்தில் காணப்பட்டால், பொருளாதார நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் எனவும், எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டால் அது நாட்டுக்கு சவாலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விலையேற்றத்தால் ஏற்படும் பணவீக்கம் மற்றும் இலங்கை ரூபாயின் மீதான அழுத்தங்களை நாடு எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய வங்கி ஆளுநரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இலங்கையின் பணவீக்கம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியால் மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகளும், இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பொருளாதார நிலைமையை சீர்படுத்துவதற்கு பங்களித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து காணப்பட்டாலும், கடுமையான நிபந்தனைகள் மற்றும் உயர்ந்த விலைகள் காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4 முதல் 5 சதவீதம் வரையான மிதமான நிலையில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட இறையாண்மைக் கடன் நெருக்கடி மற்றும் அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இணைந்ததிலிருந்து இலங்கை தொடர்ந்து பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
நான்கு வருடங்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்தகட்ட மீளாய்வு இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இடம்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய வங்கி ஆளுநர் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
