ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை, அவருக்கான பிணையை வழங்குவதற்காக உறவினர்களாக நீதிமன்றத்தில் முன்னிலையான இருவர் போலி பிணையாளர்கள் என தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பிணை நிபந்தனைகளின் அடிப்படையில், அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது.
இந்த செயலில் ஈடுபட சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நீதிமன்ற நம்பிக்கையை மீறியுள்ளதாக கருதி கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, கபில சந்திரசேனவின் சடலம் இன்று கொள்ளுப்பிட்டியவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
