ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் மீண்டும் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளையகத்தின் தகவலின்படி, ஜஸ்க் கடலோரப் பகுதியில் இருந்து ஹோர்முஸ் நீரிணை நோக்கி பயணித்த ஈரானிய எண்ணெய் கப்பல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஃபுஜைரா துறைமுகத்திற்கு அருகே சென்ற மற்றொரு கப்பல் ஆகியவை அமெரிக்கப் படைகளால் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வாழும் பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் சிறிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலடியாக, தாக்குதல்களுக்கு காரணமான ஈரானிய இராணுவத் தளங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்ட இந்த மோதல், சர்வதேச கடல் பாதுகாப்பு மற்றும் உலக எண்ணெய் விநியோகத்தில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
