விஜய் பிறந்தநாளை ஒட்டி ‘ஜனநாயகன்’ வெளியீடு? ரசிகர்கள் உற்சாகம்



 எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’ தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வர இருந்த இந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே, படம் ஆன்லைனில் கசிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா கடந்த 23 ஆம் திகதி திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்த பின்னர், ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கை சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், சான்றிதழ் கிடைத்தவுடன் விரைவில் படம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், தற்போது சமூக வலைத்தளங்களில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூன் 19 ஆம் திகதி வெளியாகும் என புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதனால் படம் தொடர்பான தேடல்கள் அதிகரித்து டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் திகதியை முன்னிட்டு படம் ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இதனால் ஜூன் 19 வெளியீடு மற்றும் ஜூன் 22 பிறந்தநாள் என இரட்டை கொண்டாட்டம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

எனினும், ‘ஜனநாயகன்’ வெளியீட்டு திகதி குறித்து பல்வேறு யூகங்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.