வயோதிப தம்பதியினர் கொலை வழக்கு: பிரதான சந்தேகநபர் தப்பியோட்டம்.



 ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை – பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த சந்தேகநபர், பொதுமக்களின் உதவியுடன் கடந்த சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்கான விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தலைமறைவாக இருப்பதால், அவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.