வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மாணவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் நீண்ட நாட்களாக ‘மாவா’ எனப்படும் தடைசெய்யப்பட்ட பாக்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியை முற்றுகையிட்ட பொலிஸார், கடையை நடத்தி வந்த நபரை முதலில் கைது செய்தனர். அதே நேரத்தில், மாவா பாக்கு வாங்க வந்த மாணவர்கள் உட்பட மேலும் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
சுற்றிவளைப்பின்போது, அங்கிருந்து மாவா பாக்குகள், றோஸ் பவுடர், பொமலைன்ட் உள்ளிட்ட பல்வேறு தடைசெய்யப்பட்ட பொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
