அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் பிறநாட்டு புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள கொங்கோ ஜனநாயகக் குடியரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் கீழ், கொங்கோ குடிமக்கள் அல்லாதவர்களையும் அந்த நாடு தற்காலிகமாக தங்க வைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் கின்ஷாசாவில் தற்காலிக வரவேற்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் தயாராகி வருவதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைக்கான தளவாட மற்றும் தொழில்நுட்ப ஆதரவை முழுமையாக அமெரிக்கா வழங்கும் என்றும், இதனால் கொங்கோ அரசாங்கத்திற்கு நேரடி நிதிச் சுமை ஏற்படாது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் எத்தனை புலம்பெயர்ந்தோர் அனுப்பப்படுவார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கு முன் எசுவாத்தினி, கானா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளும் இதேபோன்ற திட்டங்களில் இணைந்திருந்தன. கடந்த வாரம் கூட, பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த எட்டு பேர் உகாண்டாவிற்கு அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தகைய நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்க செனட் குழுவின் அறிக்கையின்படி, 2026 ஜனவரி வரை இத்தகைய நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக 40 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், எக்குவடோரியல் கினியா, ருவாண்டா, எல் சால்வடார், எசுவாத்தினி மற்றும் பலாவு ஆகிய ஐந்து நாடுகளுக்கு மட்டும் சுமார் 32 மில்லியன் டொலர் நேரடியாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், கோபால்ட், டான்டலம், லித்தியம் மற்றும் தாமிரம் போன்ற முக்கிய கனிம வளங்களைப் பெறுவதற்காக கொங்கோவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் சட்டபூர்வத் தன்மை மற்றும் மனிதாபிமான விளைவுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில், இது நிரந்தர குடியேற்றத் திட்டம் அல்ல என்றும், சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கொங்கோ அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
