ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்க படைத்தளங்களையும் இஸ்ரேல் பகுதிகளையும் குறிவைத்து ஈரான் தொடர்ந்து எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரபிக்கடலில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படும் கச்சா எண்ணெய் கப்பல்கள் தடைப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச வர்த்தகத்திலும் பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்காக ஹார்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்பே காலக்கெடு விதித்திருந்தார். ஆனால் அந்த எச்சரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும், இந்த நடவடிக்கையை கொண்டாடுவதற்காக தான் இங்கு கூடியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், “ஈரான் என்ற நாட்டையே ஒரே இரவில் அழிக்க முடியும். அந்த இரவு இன்று கூட இருக்கலாம்,” என அவர் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், தனது ‘Truth Social’ சமூக வலைதள பதிவிலும், செவ்வாய்க்கிழமை வரை விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைகிறது என்றும், அதற்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானில் மின் நிலையங்கள் கூட செயல்பட முடியாத நிலை ஏற்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடையும் அபாயம் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.
