பல மாகாணங்களில் மழை சாத்தியம், கடும் வெப்பம் குறித்து அவதானம் - Eelatheepam is a Voice of EELAM புலனாய்வு செய்திகள்

பல மாகாணங்களில் மழை சாத்தியம், கடும் வெப்பம் குறித்து அவதானம்




நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மேல் மாகாணம் மற்றும் புத்தளம், யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை ஏற்படும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, சூரியன் வடதிசை நோக்கி நகரும் காலப்பகுதியாக இருப்பதால், ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சியில் காணப்படும் காலமாகும்.

இன்றைய தினம் நண்பகல் 12:13 மணியளவில் பேருவளை, குருலுபெத்த, ரக்வானை, கொடகவெலை, உடவலவை மற்றும் தனமல்வில பகுதிகளின் மேல் சூரியன் நேரடியாக நிலைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அதிக வெப்பநிலை நிலவும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.