ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, இன்று முதல் அதனை நடைமுறைக்கு கொண்டுவரும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக ரொயிட்டர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத் திட்டத்தை தயாரித்து, நேற்றிரவு இரு நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. திட்டம் இரண்டு கட்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது; முதலில் உடனடி போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் விரிவான உடன்படிக்கை நடைமுறைக்கு வரும். ஆரம்ப கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பாகிஸ்தான் மூலம் ஒரே தகவல் தொடர்பு ஊடகமாக ஒழுங்குபடுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஈரான் பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதை உறுதி செய்தது, முடக்கப்பட்ட வெளிநாட்டு சொத்துக்கள் விடுவிக்கப்படும், மேலும் அணு ஆயுதங்களை உருவாக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை இந்த செய்தி இரு நாடுகளாலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்தவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக ஃபார்ஸ் (Fars) தகவல் வெளியிடியுள்ளது. அதில், யுத்தம் தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலையில் ஒப்பிடுகையில், கப்பல் போக்குவரத்து 90% குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படவில்லை, அது எதிரி நாடுகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளனர். கூடுதலாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு சுங்க வரி விதித்த பின்னர், அந்த வருவாய் யுத்தத்தால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்ய பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
