கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் பகுதியில், சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ வகை போதைப்பொருளுடன் ஒருவர் இலங்கை சுங்கத் திணைக்களம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று மதியம் பேங்கொக் நகரிலிருந்து வந்த விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கொண்டுவந்த நான்கு பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களின் உள்ளே மிகவும் நுணுக்கமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சோதனை நடவடிக்கையின் போது, அந்த சைலன்சர்களுக்குள் இருந்து மொத்தம் 25 கிலோ 500 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமான நிலையத்தில் வர்த்தகப் பொருட்களுக்கான “சிவப்பு வழி” (Red Channel) ஊடாக இந்தப் பொருட்களை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
