சமகால அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கணனி மோசடி விவகாரம் குறித்து நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தங்காலை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் கூறும் ஹேக்கிங் சம்பவம் தொடர்பான விளக்கம் நம்ப முடியாத ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார்.
“ஹேக்கர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, உங்கள் கணக்கை ஹேக் செய்யப் போகிறேன்; அதற்கு முன்னால் ஆவணங்களில் கையொப்பமிடுங்கள் என கூறி கையொப்பம் பெற்றதாக அரசாங்கம் கூறுவது உலகிலேயே கேட்காத நகைச்சுவையான கதையாகும்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், இது ஒரு ஹேக்கிங் சம்பவம் அல்ல; திட்டமிட்ட நிதி மோசடி என அவர் குற்றஞ்சாட்டினார். நிதி அமைச்சு கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளதோடு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் சில நிறுவனங்களுக்கு இருமுறை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், ஹேக்கர் தலைமறைவாக இருப்பதாகக் கூறி நீண்ட காலம் தப்பிக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் மற்றும் புலம்பெயர்ந்தோரின் உதவித்தொகைகள் அடங்கிய கணக்கையே அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாமல் போனது கவலைக்குரியதாகும் என அவர் குறிப்பிட்டார்.
நிதி அமைச்சரின் கையொப்பம் இன்றி இவ்வாறான நிதி பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாது என்பதால், திருடர்கள் அரசாங்கத்தின் உள்ளேயே இருக்கக்கூடும் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, அரசாங்கம் உண்மையை மறைக்க முயற்சிப்பதாகவும், மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாப்பதை விட தங்களுக்கு தேவையானவர்களுக்கு அனுகூலங்களை வழங்குவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
