இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு லெபனான் தயாராகிறது – புதிய இராஜதந்திர முயற்சி

 



லெபனான் அரசு, இஸ்ரேல் உடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்புவதாக அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் யூசுப் ராகி தெரிவித்துள்ளார். லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், எல்லைப் பகுதியில் நிரந்தர போர்நிறுத்தத்தை எட்டவும், மேலும் லெபனான் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகளை முழுமையாக வெளியேற்றவும், இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட பெய்ரூட் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முக்கிய முடிவு, ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி அவர்களுடன் தொலைபேசி மூலம் நடைபெற்ற உரையாடலின் போது பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உரையாடலின் போது, போலந்து அரசு, லெபனான் எல்லைகளின் இறையாண்மையை அங்கீகரிப்பதுடன், லெபனானின் எந்த பகுதியையும் இணைக்கும் முயற்சிகளைத் திட்டவட்டமாக எதிர்ப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் படைகளும் இடையே கடந்த மார்ச் 2 முதல் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள், அமெரிக்காஈரான் பதற்ற நிலையின் பின்னணியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 23ஆம் திகதி, அமெரிக்கா லெபனான்–இஸ்ரேல் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டித்ததாக அறிவித்திருந்தது.

எனினும், இந்த நேரடி பேச்சுவார்த்தை முயற்சியை ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நேற்று நிராகரித்ததோடு, இத்தகைய பேச்சுவார்த்தைகள் நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.