சோமாவதி வனம் அருகே பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (14) மாலை சேருநுவர பகுதியில் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மூவரும், அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களின் உடல்களைத் தேடும் பணியில் கடற்படை உயிர்காப்புப் பிரிவினரும் சேருநுவர பொலிஸ் நிலையம் அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, ஹபராதுவ பகுதியில் மேலும் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை ஹபராதுவ கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.
அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு களுக்கல வைத்தியசாலைக்கு அனுமதித்த போதிலும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் ஹபராதுவ பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹபராதுவ பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
