பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சோதனை நடவடிக்கை, விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாமில் அமைந்துள்ள தலைமையக விசேட செயல்பாட்டு பிரிவினரால், களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் உள்ள குடா வஸ்கடுவ, ரத்னஜோதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ‘பொம்புவல நவின்’ என்பவரின் கடத்தல் வலையமைப்பில் உறுப்பினராகவும், ‘கதனஆரச்சிகே நுவான் இரேஷ் பெர்னாண்டோ’ என்பவருக்காக போதைப்பொருள் விநியோகிப்பவராகவும் செயற்பட்டு வந்த 44 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘பட்டி அக்கா’ என்ற புனைப்பெயரில் அறியப்படும் இந்த சந்தேக நபரிடமிருந்து:
- 2 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா
- 110,000 ரூபாய் பணம்
- மின்சார தராசு ஒன்று
என பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
