ஈரானைச் சுற்றியுள்ள போர் நிலைமைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது.
இன்று (30) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டதுடன், ஒரு பீப்பாய் Brent Crude Oil விலை 115.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 2.9% உயர்வைக் குறிக்கிறது.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு முன்பு, ஒரு பீப்பாய் எண்ணெய் விலை சுமார் 72 டொலராக இருந்தது.
போரின் தாக்கம் காரணமாக, கடந்த வாரம் மார்ச் 19 அன்று எண்ணெய் விலை 118 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டது. பின்னர் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது விலை 112 டொலருக்கு அருகில் குறைந்திருந்தாலும், இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் மீண்டும் 115 டொலரைத் தாண்டியுள்ளது.
போருக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில், எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் அழுத்தம் அதிகரித்து வருவதாகவும், பொருளாதார தாக்கங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து, இரு தரப்பும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், எண்ணெய் விலைகள் மேலும் மாறுபடும் சூழல் உருவாகியுள்ளது.
