மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் முதலீடு செய்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கான செயற்றிட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கை முதலீட்டுச் சபை சமர்ப்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையால் எழும் நெருக்கடிக்கு இலங்கையை ஒரு உகந்த முதலீட்டு மையமாக பயன்படுத்துவதே தங்களின் நோக்கம் என்று இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கான பதில்களை ஜனாதிபதியும் நிதி அமைச்சும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். போர் குறித்த அச்சம் இல்லாததும், நீர்வளம் கொண்ட நாடாக இருப்பதும் முதலீடுகளை ஈர்ப்பதில் இலங்கைக்குச் சாதகமாக அமைந்துள்ளன என அவர் கூறியுள்ளார். தொலைத்தொடர்பு, சுற்றுலா, கல்வி, நிதிச் சேவைகள், மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தளவாடங்கள் போன்ற துறைகளில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிறுவனங்களை நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கலாம் என பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் உள்ள இலங்கைத் தூதர்கள் எதிர்காலத்தில் பொருளாதார இராஜதந்திரம் தொடர்பாக மேலும் முக்கிய பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும் என்று முதலீட்டுச் சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.டுபாயைப் போன்ற வரி விலக்குக் கொள்கைகளுடன் இந்த நாட்டில் முதலீட்டை வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் தற்போதைய போர்ச் சூழலை எதிர்கொண்டு, பாதுகாப்பு, நீர் மற்றும் உயிர்ச்சக்தி ஆகியவற்றைக் கொண்ட ஒரு மூலோபாய வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.