ஈரான் பாராளுமன்றக் குழு, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின்னர் அனுமதி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த நீரிணை வழியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
இதனுடன், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு வழங்கிய பிற நாடுகளின் கப்பல்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஓமான் உடன் இணைந்து இந்த புதிய கட்டண முறைமை செயல்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய கச்சா எண்ணெய் கடத்தலில் முக்கிய பங்காற்றும் இந்த நீரிணை வழியாக, உலக எண்ணெய் தேவையின் சுமார் 20% வரை போக்குவரத்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடல்சார் தரவு ஆய்வு நிறுவனம் Kpler வெளியிட்ட தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து இந்தப் பாதை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து சுமார் 95% அளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
