யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்று (31) இரண்டு முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
முதலாவது சம்பவம் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கு கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அல்வாய் பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவல்களுக்கு அமைவாக, அவர் நேற்று (30) குடும்பத்தினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிய நிலையில், இன்று காலை அவர் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மற்றொரு சம்பவத்தில் இணுவில் கந்தசுவாமி கோவில் அருகில் இன்று அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸார்க்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்தவர் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய நபர் என்றும், நான்கு பிள்ளைகளின் தந்தை என்றும் தெரியவந்துள்ளது.
இரண்டு சம்பவங்களின் பின்னணியும் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.