ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செயல்படும் பல முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை வெளியிட்ட தகவலின்படி, அண்மையில் ஈரானிய எல்லைக்குள் நடைபெற்ற தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் நடவடிக்கையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்களில் Apple, Microsoft, Google, Tesla, Intel, IBM மற்றும் Boeing உள்ளிட்டவை அடங்குகின்றன.
ஈரானிய தரப்பின் கூற்றுப்படி, தமது நாட்டுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடி வழங்கப்படும் என்றும், இந்த நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் இலக்காகக் கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிப்பதாவது, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்கள் ஏவுகணை அல்லது சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகின்றது.
இதற்கிடையில், Amazon நிறுவனத்தின் சில தரவு மையங்கள் அண்மையில் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
