இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேரை மல்லாகம் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி எல்லை மீறி நுழைந்ததாகக் கூறப்படும் இந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களைச் சேர்ந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால், 25 பேரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனுடன், பெப்ரவரி 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட மற்றொரு 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
அந்த வழக்கில், குறித்த 12 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
