இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க், இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகளின் பெயர்களுடன் பில் கேட்ஸின் பெயரும் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்னஞ்சலில் இருந்த அதிர்ச்சித் தகவல்: 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எப்ஸ்டீன் அனுப்பியதாகக் கூறப்படும் ஒரு மின்னஞ்சலில், "பில் கேட்ஸ் ஒரு ரஷ்யப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்குப் பால்வினை நோய் ஏற்பட்டதாகவும்" குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த நோயைத் தனது அப்போதைய மனைவி மெலிண்டாவிற்குத் தெரியாமல் குணப்படுத்த, அவருக்குத் தெரியாமலேயே உணவில் மருந்தைக் கலந்து கொடுக்க எப்ஸ்டீனிடம் பில் கேட்ஸ் உதவி கேட்டதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.
பில் கேட்ஸின் மறுப்பு: இந்தச் சர்ச்சை குறித்துப் பில் கேட்ஸ் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
"எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற ஒரு மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் முற்றிலும் போலியானது. ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் என் மீது தாக்குதல் நடத்த அவர் முயன்றுள்ளார். 2011-ஆம் ஆண்டு முதல் அவரை ஒரு சில முறை இரவு விருந்துகளில் சந்தித்தது உண்மைதான். ஆனால், அவருடைய கரீபியன் தீவுகளுக்கு நான் ஒருபோதும் சென்றதில்லை; எந்தப் பெண்களுடனும் தவறான உறவு வைத்துக்கொள்ளவில்லை."
வருத்தம் தெரிவித்த கேட்ஸ்: மேலும், எப்ஸ்டீனுடனான நட்பு குறித்துப் பேசுகையில், "அவருடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் இன்று வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்," எனப் பில் கேட்ஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
