இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி 12,691,033 ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பில், 36 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம் (Telegram) செயலி ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழியில் வியாபாரம் செய்து அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பெருந்தொகைப் பணத்தை மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 12,691,033 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகளின்போது, மோசடி செய்யப்பட்ட பணத்தில் 500,000 ரூபாயைத் தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துகொண்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண மோசடி மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
