யாழ்ப்பாணம் அரியாலையில் கிணற்றிலிருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

 



யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் உள்ள காணியொன்றில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணியில் உள்ள கிணற்றைச் சுத்தம் செய்து நீரை இறைக்கும் பணியில் ஈடுபட்டபோது, கிணற்றுக்குள் காணப்பட்ட சாக்கு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வெளியே எடுத்து சோதனையிட்டபோது, அவற்றுக்குள் பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் இருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (21) நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் கிணற்றுக்குள் உள்ள துப்பாக்கி ரவைகளை முழுமையாக மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த துப்பாக்கி ரவைகள் எவ்வாறு அங்கு கொண்டுவரப்பட்டன, அவை எவ்வளவு காலமாகக் கிணற்றுக்குள் வைக்கப்பட்டிருந்தன என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.