அநுராதபுரம் மாவட்டத்தின் மதவாச்சி – ரம்பேவை பகுதியில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (20) நண்பகல் 12.30 மணிக்கும் பிற்பகல் 1.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரம்பேவை, வெலியோ சந்தைப் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் உறவினர்களான மூன்று பெண்கள் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். இதன்போது மழை பெய்ததால், அவர்கள் அருகிலிருந்த மரமொன்றின் கீழ் ஒதுங்கியிருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மூவரும் காயமடைந்த நிலையில், ரம்பேவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களில் 61 மற்றும் 26 வயதுடைய இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மின்னல் தாக்கத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.