இலங்கையின் ஆறு மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (13) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, நாளை (14) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திறந்தவெளிகள், உயரமான மரங்கள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தங்குவதைத் தவிர்ப்பதுடன், பாதுகாப்பான கட்டடங்களுக்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வானிலை நிலைமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.
