வாகனங்களுக்கான வீதித் தகுதிச் சான்றிதழ்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 



வாகனங்களுக்கான வீதித் தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்களும் ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சான்றிதழ் முறைமையை அறிமுகப்படுத்துவது தொடர்பில், குறிப்பாகப் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பில் வீதித் தகுதி மூலோபாயக் குழுவின் ஊடாகத் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, சான்றிதழ் வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படும் திகதி, எந்தெந்த வாகனங்களுக்கு அது கட்டாயமாக்கப்படும், வாகனங்கள் பயணித்துள்ள மொத்தத் தூரம் உள்ளிட்ட தகுதிக் கோலங்கள், சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் அதற்குத் தேவையான சட்ட, நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

எனவே, இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் வரை, சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் திகதி அல்லது அதற்கான நிபந்தனைகள் குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதுடன், தவறான புரிதல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் வழிவகுக்கக்கூடும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, வாகனங்களுக்கான வீதித் தகுதி மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் தொடர்பான சரியான, புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.