‘குக் வித் கோமாளி’ புகழ் செப் தாமு காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

 




இந்தியாவின் பிரபல சமையல் கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செப் தாமு, தனது 72ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (25) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமோதரன் என்பது செப் தாமுவின் இயற்பெயராகும். சமையல் கலையில் தனித்துவமான திறமையைக் கொண்டிருந்த அவர், இந்தியாவின் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றியதுடன், உலகின் பல்வேறு நாடுகளின் உணவு வகைகளையும் தயாரிப்பதில் சிறந்து விளங்கினார்.

கின்னஸ் உலக சாதனை படைத்த சமையல் கலைஞர்

2010ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணித்தியாலங்கள், 30 நிமிடங்கள், 12 விநாடிகளில் 617 வகையான உணவுகளைச் சமைத்து செப் தாமு கின்னஸ் உலக சாதனை படைத்தார். இந்தச் சாதனை அவருக்கு சர்வதேச அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.

மேலும், 2004ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற பெருமையையும் அவர் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமையல் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, இந்திய மத்திய அரசாங்கம் அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம்

சமையல் கலையில் மட்டுமன்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் செப் தாமு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதன்மை நடுவராகப் பங்கேற்று, தனது நகைச்சுவை கலந்த அணுகுமுறையாலும் தனித்துவமான விமர்சனங்களாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதற்கு மேலதிகமாக, சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றதுடன், ‘கள்ளப்படம்’, ‘ஒரு பக்கக் கதை’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், இணையத் தொடரொன்றிலும் நடித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப் தாமுவின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், சக சமையல் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சமையல் கலையில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்த செப் தாமுவின் மறைவு, இந்திய சமையல் உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.