வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ (ARNAB) சூறாவளி காரணமாக கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (26) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த வானிலை எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குப் பகுதி மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்குப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ‘அர்னாப்’ சூறாவளியாக உருவெடுத்துள்ளது.
இந்தச் சூறாவளி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இன்று இரவு 11.30 மணியளவில் மத்திய மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளியாக மாறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 100 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் அபாயம்
இதன் தாக்கத்தினால் குறிப்பிட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என்பதால், குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கலாம்
அர்னாப் சூறாவளி இலங்கையை நேரடியாகத் தாக்காது என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் காற்றுச் சுழற்சியின் தாக்கம் நாடு முழுவதும் உணரப்படக்கூடும்.
இதன் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
வட அகலாங்கு 10 முதல் 20 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எதிர்வரும் வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.