6 மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை

 





இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (19) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (20) அதிகாலை 1 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அத்துடன், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

  • இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும்.
  • நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்ப்பரப்புகள் உள்ளிட்ட திறந்தவெளிகளில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்தும்போது அவதானமாக இருக்க வேண்டும்.
  • சாய்ந்து விழக்கூடிய மின்கம்பங்கள், அறுந்து விழும் மின்கம்பிகள் மற்றும் முறிந்து விழக்கூடிய மரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும், அவசர உதவி அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.