இன்று இரவு பலத்த மின்னல் தாக்கும் அபாயம் – 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

 



இலங்கையின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (15) முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு, நாளை (16) அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்கள் மற்றும் பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை

வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திறந்தவெளிகள், உயரமான மரங்கள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தங்குவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.