கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவுடன் ஒக்டோபர் 09ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்வித் துறையில் பண்புசார் மற்றும் கட்டமைப்புசார் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பல முக்கிய கொள்கைகளுக்கும் முன்மொழிவுகளுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதிய பாடத்திட்டம் மற்றும் மாணவர் மதிப்பீட்டு முறைக்கு அனுமதி
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எண்ணக்கருத் தாள், தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் முதலாம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரையிலான மாணவர் மதிப்பீட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
உயர்தரத்துக்கான மாணவர் மதிப்பீட்டுக் கட்டமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
மேலும், தேசிய கல்விச் சபையை அமைப்பதற்கான அறிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான வரைவைத் தயாரிப்பதற்குக் கல்வி அமைச்சின் ஊடாகக் குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
டிஜிட்டல் கல்விக்கு 96 பில்லியன் ரூபா
கல்வித் துறையை டிஜிட்டல்மயமாக்குவதற்கான கொள்கை, தேசிய கல்வி ஆணைக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். குறித்த கொள்கை எதிர்காலத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பாடசாலைக் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 96 பில்லியன் ரூபா செலவிலான திட்ட முன்மொழிவுக்கு கொள்கையளவிலான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்கள் இரண்டிலும் கல்வித் தரத்தை உறுதிப்படுத்தும் செயற்றிட்டத்தை வலுப்படுத்துவதற்கான உபகுழுவொன்றும் செயற்பட்டு வருகின்றது.
2028 முதல் உயர்கல்விக்கு ஒருங்கிணைந்த விண்ணப்ப முறை
உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பிப்பதால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்குப் புதிய திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, உயர்கல்விக்கான பல்வேறு தெரிவுகளுக்கும் ஒரே வலையமைப்பின் ஊடாக விண்ணப்பிக்கக்கூடிய 'ஒருங்கிணைந்த சேர்க்கைக் கொள்கை' ஒன்றைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முறைமையை 2028ஆம் ஆண்டு முதல் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
உயர்கல்வி மற்றும் தனியார் பட்டப்படிப்புகளுக்குப் புதிய கொள்கைகள்
பொறியியல், மருத்துவம், மருத்துவப் பட்டப்பின் கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான கொள்கைகளைத் தயாரிப்பதற்குச் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பட்டங்களை வழங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்குதல் தொடர்பான வழிகாட்டுதல்களைக் கொண்ட புதிய கொள்கைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர்களின் இணையப் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டல்கள்
மாணவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனை உறுதிப்படுத்துவதற்காக ஐந்து வயது வகுதிப் பிரிவுகளின் அடிப்படையில் வழிகாட்டல் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகள், மூன்றாம் முதல் ஐந்தாம் ஆண்டுகள், ஆறாம் மற்றும் ஏழாம் ஆண்டுகள், எட்டாம் முதல் பத்தாம் ஆண்டுகள், அத்துடன் 11ஆம் ஆண்டு முதல் 13ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்குத் தனித்தனி வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆரம்பித்து, முழுமையான நடைமுறைப்படுத்தலை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழிற்கல்வி மற்றும் ஆசிரியர் ஆட்சேர்ப்பிலும் மாற்றங்கள்
தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் (TVET) துறையைத் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், தொழிற்சாலைசார் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் தொழிற்கல்வியின் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு அம்ச மூலோபாயத் திட்டமும் இதன்போது ஆராயப்பட்டது.
அதேவேளை, ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப விரைவாக ஆசிரியர்களை ஆட்சேர்த்தல், ஆசிரியர் இடமாற்றங்களை முறைப்படுத்துதல், பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், விளையாட்டு மற்றும் செய்முறைச் செயற்பாடுகளை மேம்படுத்துதல், மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
