நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ரம்புக்கனை மற்றும் பேராதனை – கம்பளை இடையிலான அனைத்து புகையிரத சேவைகளும் இன்று (25) நள்ளிரவு 12 மணி முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
ரம்புக்கனை மற்றும் பேராதனை புகையிரத நிலையங்களுக்கு இடையில், கடிகமுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக புகையிரதப் பாதையில் மண் சரிந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதையை விரைவாகச் சீரமைத்து புகையிரத சேவைகளை வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில், நேற்று (24) மற்றும் இன்று அவசர புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும், குறித்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மேலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் நீடிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், புனரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, புகையிரதப் போக்குவரத்துக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை குறித்த வழித்தடங்களிலான அனைத்து புகையிரத சேவைகளையும் இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்குக் கட்டணம் செலுத்திய பயணிகள், தாங்கள் செலுத்திய முழுத் தொகையையும் புகையிரத நிலையங்களில் மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
.jpg)