கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த அலுவலக ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை தடம்புரண்டதில், மலையகப் பாதையிலான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த குறித்த ரயில், இன்று அதிகாலை சுமார் 4.40 மணியளவில் கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளது.
ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த மண் சரிவு மற்றும் பாறைகள் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தால் சேதமடைந்த மலையக ரயில் பாதை புனரமைக்கப்பட்ட பின்னர், பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த முதலாவது அலுவலக ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
விபத்தில் ரயிலின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும், சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் குறித்து ரயிலின் சாரதி டீ.ஏ.பி. செந்தநாயக தெரிவிக்கையில், ரயில் பாதையின் குறுக்கே மண் சரிந்து விழுந்திருந்ததாகவும், அதனை ரயில் குழுவினர் அவதானித்தபோது சுமார் 10 மீற்றர் தூரமே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மண் திட்டில் ரயில் மோதியதையடுத்து அது தூக்கி வீசப்பட்டதாகவும், அதே வேகத்தில் பாறையொன்றிலும் மோதியதால் ரயிலின் முன்பகுதி சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தையடுத்து மலையகப் பாதையில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதமடைந்துள்ளன. ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.