நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த அம்பாறை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி அறிவிக்கப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியின் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை ஒரு கிலோகிராமுக்கு 255 ரூபாயாக இருந்துள்ளது. எனினும், குறித்த பல்பொருள் அங்காடியில் இரண்டு கிலோகிராம் அரிசி 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் அரிசி 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு கிலோகிராமுக்கு 25 ரூபாய் அதிகமாக அறவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு கிலோகிராம் அரிசிக்கு மொத்தமாக 50 ரூபாய் மேலதிகமாகப் பெறப்பட்டுள்ளது.
2025 ஒக்டோபர் 21ஆம் திகதியிடப்பட்ட 2459/12ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 94ஆம் இலக்க கட்டளையின் பிரகாரம், இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு கிலோகிராமுக்கு 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை நிர்ணயக் கட்டளையை மீறியமை தொடர்பில், 2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2021ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கின்போது, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் கொள்வனவு செய்யப்பட்ட அரிசிப் பொதி, பணப்பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்ட பணம் மற்றும் ரசீது உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனையடுத்து, 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி வழக்கை விசாரித்த அம்பாறை நீதிவான் நீதிமன்றம், குறித்த பல்பொருள் அங்காடிக்கு 500,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
