இலங்கையின் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கலை பகுதியில், பஸ் ஒன்று புகையிரதத்துடன் மோதி இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய மற்றும் உனவட்டுன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் குறித்த பஸ்ஸின் பின்பகுதி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அருங்காட்சியகத்திலிருந்து திரும்பியபோது விபத்து
கொட்டாவ பகுதியிலிருந்து மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் சிறுவர்கள் கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிடச் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸில் 14 மேலதிக வகுப்பு ஆசிரியர்கள், ஆறு பெற்றோர்கள் மற்றும் சுமார் 41 சிறுவர்கள் என மொத்தம் 61 பேர் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த சிறுவர்கள் 14 மற்றும் 15 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக் கடவை இல்லாத புகையிரதக் கடவை
விபத்து இடம்பெற்ற புகையிரதக் கடவையில் பாதுகாப்புக் கடவை (Gate) இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார விளக்கு சமிக்ஞை மற்றும் ஒலி சமிக்ஞை மூலமாகவே இந்தக் கடவை இயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஸ் சாரதி, நடத்துனர் கைது
இந்த விபத்து தொடர்பில் 40 வயதுடைய பஸ் சாரதியும் 21 வயதுடைய நடத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
